search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்கள் விரட்டியடிப்பு"

    • இலங்கை கடற்படையினர் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 2 மீனவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது என மீனவர்கள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும், விசைப்படகுகளுடன் மீனவர்கள் சிறைப்பிடிப்பு சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறித்தான் வருகிறது. மீனவர்களின் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வாகும் என்ற ஒற்றை வாசகம் இந்த பாராளுமன்ற தேர்தலில் ஓங்கி ஒலித்து வருகிறது.

    இதற்கிடையே எல்லை தாண்டி வந்ததாக குறிப்பாக ராமேசுவரம் மீனவர்கள் மாதத்தில் 20-க்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம், உண்ணாவிரதம் இருந்தபோதிலும் நிரந்தர தீர்வு எட்டப்படாமலேயே உள்ளது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 338 விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதிசீட்டு பெற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு, நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 5 குட்டி ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தாக்கி விரட்டியடித்தனர். மேலும் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    ஆனாலும் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் மெக்கானிக் (வயது 34) என்பவரை தண்ணீர் பைப்பை கொண்டு இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு இடது கை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதே போல் ராமேசுவரம் மீனவர் தங்கம் (55) என்பவரையும் கம்பு மற்றும் கம்பியால் தாக்கியதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே படகில் இருந்த மீனவர்கள் பாதியில் இன்று அதிகாலை கரை திரும்பினர். கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது என மீனவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் இலங்கை கடற்படையினர் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 2 மீனவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கேரள விசைப்படகு மற்றும் அதிலிருந்த 13 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.
    • மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    குளச்சல்:

    கடந்த 19-ந் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்த குளச்சலை சேர்ந்த 73 மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் தூத்துக்குடி மீனவர்கள் சிறைப்பிடித்து தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் ஒரு கேரள விசைப்படகு மற்றும் அதிலிருந்த 13 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்து குளச்சல் விசைப்படகினர் மற்றும் பைபர் வள்ளம், கட்டுமர மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சிறைபிடிக்கப்பட்டு 5 நாட்களாகியும் மீனவர்கள் விடுவிக்கப்படாததால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்து உள்ளனர். அவர்களை நேற்று இரவு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மீனவர்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நள்ளிரவு 2 மணிவரை அங்கிருந்தவாறு தூத்துக்குடி காவல்துறை அதிகாரிகள் மற்றும் பா.ஜ.நிர்வாகிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    • இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த கடற்படையினர் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 7 மீனவர்களை சிறைபிடித்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
    • ஒரே நாளில் 32 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அவர்களை சிறைபிடிப்பதோடு, பல லட்சம் மதிப்பிலான மீனவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். இலங்கை சிறையில் இருந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மீனவர்கள் விடுதலையானபோதும், படகுகளை அரசுடமையாக்குவதால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.

    கடந்த 16-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆரோக்கிய கந்தன், இஸ்ரோல் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளுடன் அதில் இருந்த 21 மீனவர்களை 17-ந்தேதி அதிகாலையில் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். காங்கேசன்துறை முகாம் அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் ஒரே வாரத்தில் 2-வது சம்பவமாக இன்று 32 மீனவர்களை 5 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்றை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இந்தநிலையில், அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த கடற்படையினர் இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 7 மீனவர்களை சிறைபிடித்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

    இதே போன்று காங்கேசம் கடற்படையினர் 3 விசைப் படகுகளுடன் 25 மீனவர்களை சிறைபிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். படகில் இருந்த மீனவர்கள் விக்டோரியன் என்பவரது விசைப்படகுகளில் இருந்த அந்தோணி ஆரோன், ஜேசு ராஜா, திருப்பால் மற்றும் அருளானந்தம் என்பவரது படகில் இருந்த ஜெகன், அந்தோணி காட்ஷன், ராஜசேகர், ராஜா முகம்மது, ரஞ்சித், ராமு, காயன், மோகன், மனோகரன், சேகரன், முருகன் உள்ளிட்ட 32 மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில், 5 விசைப்படகுகளை பறிமுதல் செய்ததுடன் மீனவர்கள் 32 பேர் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை நீதியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் 32 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீனவர்களை கைது செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அனைத்து விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் வி.பி.ஜேசுராஜா கூறியதாவது:-

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை கடந்த மூன்று மாதங்களாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை மத்திய அரசு கவனம் செலுத்தி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையாண்டும் இப்பிரச்சனைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
    • அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் காலங்காலமாய் தொடர்ந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை கையாண்டும் இப்பிரச்சனைக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

    இதற்கிடையே எல்லை தாண்டியதாக கைதாகும் மீனவர்களுக்கு தண்டனை வழங்கிடும் வகையில் இலங்கை அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் 2 சம்பவங்களில் சிறைபிடிக்கப்பட்ட நான்கு மீனவர்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகளையும் அரசுடமையாக்கி வருகின்றனர்.

    இதனை கண்டித்தும், இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுக்க வேண்டும். விடுவிக்கப்பட்ட மீனவர்களின் 10 படகுகளை மீட்க அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். விடுவிக்கப்படாமல் உள்ள 151 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்குவது போல மத்திய அரசும் இழப்பீடு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

    இதனைதொடர்ந்து, நேற்று ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும், அதற்கான பணியை தமிழ்நாடு அரசு செய்யும் என உறுதியளித்தார். இதனை ஏற்று மீனவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இதனைதொடர்ந்து, இன்று காலையில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று 7 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    • இந்த ஆண்டு அந்தோணியார் திருவிழாவில் இலங்கையில் உள்ள வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர்.
    • இந்த ஆண்டு மீனவர்கள் புறக்கணிப்பு காரணமாக ராமேசுவரம் துறைமுக பகுதி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ராமேசுவரம்:

    இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் கடல் பகுதியில் மன்னார் வளைகுடாவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் இருநாட்டு மீனவர்களும் ஓய்வு எடுப்பது, வலைகளை காய வைப்பது, மீன்களை தரம் பிரிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.

    ராமேசுவரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும் ஆலய திருவிழாவில் இரு நாட்டில் இருந்தும் ஏராளமான மீனவர்களும், கிறிஸ்தவர்களும் பங்கேற்பார்கள்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் பல வாரங்களுக்கு முன்பே தொடங்கின. இருந்தபோதிலும் தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், சிறையில் அடைப்பதுமாக பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

    இதனால் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக மீனவர்கள் மற்றும் இந்திய பக்தர்கள் பங்கேற்பார்களா? என்ற சந்தேகம் நிலவியது. ஏற்கனவே கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க 2000-க்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டங்களை தொடங்கினர். படகுகளில் கருப்பு கொடி ஏற்றியும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டும், பேரணி நடத்தியும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் போராடி வருகின்றனர்.

    இதையடுத்து கச்சத்தீவு திருவிழா தொடங்கியதால் அதில் பங்கேற்க போவதில்லை என தமிழக மீனவர்கள் முடிவு செய்தனர். இதனால் இந்தியாவில் இருந்து கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவுக்கு படகுகளை இயக்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. பக்தர்கள் யாரையும் படகுகளில் ஏற்றி சென்று கச்சத்தீவு செல்ல தமிழக மீனவர்கள் மறுத்து விட்டனர்.

    அதே நேரத்தில் கச்சத்தீவு திருவிழாவில் இலங்கை தரப்பில் இருந்து பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி இலங்கையில் இருந்து மிகவும் குறைவான மீனவர்களே கச்சத்தீவுக்கு வந்தனர். நேற்று கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இதைதொடர்ந்து திருவிழா தொடங்கியது. ஆனால் ராமேசுவரத்தில் இருந்து நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் படகுகளை இயக்கவில்லை. ஏற்கனவே பங்கேற்கபோவதில்லை என்று அறிவித்திருந்த போதிலும் இதை அறியாமல் ஏராளமான வெளிமாவட்ட, வெளி மாநில பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர். இதனால் ராமேசுவரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையொட்டி கடலோர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் துறைமுக பகுதியில் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால் இந்த ஆண்டு மீனவர்கள் புறக்கணிப்பு காரணமாக ராமேசுவரம் துறைமுக பகுதி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    அதேபோல் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிலும் தமிழக மீனவர்கள் யாரும் பங்கேற்காததால் களை இழந்து காணப்பட்டது. மிகவும் குறைவான பக்தர்களின் பங்கேற்புடன் நேற்று மாலை அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை நெடுந்தீவு பங்கு தந்தை ஏற்றி வைத்தார். ஆலயத்தில் சுற்றி 14 இடங்களில் சிலுவை பாதை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

    விழாவின் 2-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட பிஷப் ஜஸ்டின் ஞானபிரகாசம் தலைமையில் திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. அதன் பின்பு கொடியிறக்கப்பட்டது. இத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

    இந்த ஆண்டு அந்தோணியார் திருவிழாவில் இலங்கையில் உள்ள வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர். தமிழக மீனவர்கள் புறக்கணிப்பு காரணமாக இரு நாட்டில் இருந்தும் வியாபாரிகளும் புறக்கணித்தனர். இதனால் திருவிழாவில் வழக்கமாக விற்பனையாகும் பொருட்கள், கடைகள் களை இழந்து காணப்பட்டன. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    முதன் முறையாக தமிழக மீனவர்கள் கலந்து கொள்ளாமல் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா நடைபெற்றது இந்திய பக்தர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.

    • படகு ஓட்டுனருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது.
    • மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் மீன்பிடித்த போது கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரில் 18 பேரை விடுதலை செய்திருக்கும் இலங்கை நீதிமன்றம், ஜான்சன் என்ற படகு ஓட்டுனருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்திருக்கிறது.

    மீனவர் ஜான்சன் ஏற்கனவே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி விடுதலை ஆனவர் என்றும், இப்போது மீண்டும் ஒரு முறை அந்தக் குற்றத்தை செய்திருப்பதால் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.


    சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தனது கடமையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடித்துக் கொள்ளக் கூடாது.

    மீனவர்கள் தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவதைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தம், கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா புறக்கணிப்பு என ராமேஸ்வரம் மீனவர்கள் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது.
    • மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 22-1-2024 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் IND-TN-10-MM-769 மற்றும் IND-TN-10-MM-750 என்ற பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும், இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால், இதில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள், தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு, மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கியுள்ளதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவச் சமூகங்களின் கலாசார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவினை அமைப்பதன் மூலம் இது சாத்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

    அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தவிர்க்கவும், இந்திய மீனவர்களுக்கும், இலங்கைக் கடற்படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஏதுவாகவும், உரிய தூதரக வழிமுறைகளை மேற்கொண்டு கூட்டு நடவடிக்கைக் குழுவினை கூட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரியைக் கேட்டுக்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைந்து விடுவித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    • கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம்.
    • ஆறு மீனவர்கள் தவிர்த்து ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளது.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் IND-TN-08-MM-26 என்ற பதிவு எண் கொண்ட இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம்.


    இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இதுபோன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வில் பெருத்த அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது. இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளது.

    எனவே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    • மீனவர்களை தாக்கி விரட்டி அடித்து விட்டு சென்று விட்டனர்.
    • மீனவர்கள் வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    கடந்த பல நாட்களாக புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

    பின்னர் மின்வளத்துறை சார்பில் விடுக்கப்பட்ட தடை நீக்கியதால் அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ள பள்ளத்தைச் சேர்ந்தவர் பக்கிரி சாமி (வயது 40). இவருக்கு சொந்தமான பைபர் படகில் படகு உரிமையாளர் பக்கிரிசாமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (33) சக்திவேல் ( 46) ஆகிய 3 பேரும் கோடியக்கரையில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

    நேற்று மதியம் 3 பேரும் கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கும் தென்கிழக்கு 10 கடல் மைல தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையில் நள்ளிரவில் வந்து15 கிலோ வலையை வெட்டி உள்ளனர். பின்பு மீனவர்களை தாக்கி விரட்டி அடித்து விட்டு சென்று விட்டனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை 11 மணிக்கு கோடியக்கரைக்கு வந்து சேர்தனர்.

    இது குறித்து மீனவர்கள் வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

    ஆலந்தூர்:

    ராமேஸ்வரம், மண்டபம் ஆகிய பகுதிகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 64 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த அக்டோபர் மாதத்தில் 6 முறை அடுத்தடுத்து கைது செய்தது.

    இலங்கை சிறையில் இருந்த அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

    இதைத்தொடர்ந்த இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து ஒரு மீனவரை தவிர மற்ற 63 மீனவர்களை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. ஒரு மீனவர் மட்டும், தற்போது இரண்டாவது முறையாக கைதாகி இருப்பதாக கூறி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    விடுவிக்கப்பட்ட 63 மீனவர்களில் 3 கடந்த 21-ந் தேதி 15 மீனவர்கள், 22 -ந்தேதி 15 மீனவர்கள், 24-ந் தேதி 12 மீனவர்கள் என்று மூன்று தடவையாக 42 மீனவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று கடைசி கட்டமாக மேலும் 21 தமிழக மீனவர்களும் விமானம் பயணிகள் சென்னை திரும்பினர். அதிகாலை 4:15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அரசு சார்பில் ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம், அவர்களுடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால் மீனவர்களின் உறவினர்கள் மகிழ்ச்ச அடைந்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலோர காவல்படையினர் ரோந்து கப்பலில் சென்று கண்காணித்து வருகின்றனர்.
    • கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை சுற்றிவளைத்தனர்.

    இந்திய கடல் பகுதிக்குள் பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடலோர காவல் படையினர் ரோந்து கப்பலில் சென்று கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் ஒரு இலங்கை படகு அத்துமீறி நுழைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடலோர காவல்படையினர் விரைந்து சென்று அந்த படகை சுற்றிவளைத்தனர். அந்த படகில் இலங்கையை சேர்ந்த 5 மீனவர்கள் இருந்தனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அவர்கள் 5 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

    அவர்களிடம் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தார்களா அல்லது கடத்தல் பொருள் கொண்டு வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

    • 3-வது கட்டமாக இன்று சிறையில் இருந்த 22 பேரில் 21 மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
    • விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

    அந்த வகையில் கடந்த மாதம் 14 மற்றும் 28-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 64 மீனவர்களை கைது செய்த சிங்கள கடற்படை 10 படகுகளையும் பறிமுதல் செய்தது.

    அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த 8-ந்தேதி 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    அடுத்ததாக கடந்த 9-ந்தேதி 38 பேருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்த இலங்கை மன்னார் நீதிமன்றம், இந்த தண்டனையை 5 வருடம் சென்ற பிறகு அனுபவிக்க வேண்டும் என்ற விநோத நிபந்தனையுடன் விடுதலை செய்தது.

    இந்தநிலையில் 3-வது கட்டமாக இன்று சிறையில் இருந்த 22 பேரில் 21 மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. மீதமுள்ள ஒருவரான முருகன் என்பவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்துள்ளது. அதன் பின்னரும் எல்லை தாண்டினால் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரித்துள்ளது.

    விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 22 பேரும் விடுதலையாவார்கள் என்று அவர்களது உறவினர்கள் காத்திருந்த நிலையில் ஒருவருக்கு மட்டும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×